வங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 17 பேர் பலி
வங்கதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையர் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மாடியில் பற்றிய தீ மளமளவென மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். மாடிகளில் இருந்து கீழே குதித்தவர்களில் பலர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மருத்துவமனை கொண்டு சென்ற பின்பு 3 பேர் உயிரிழந்தனர். டக்கா பல்கலை கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளார். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தி 35 பேரை பத்திரமாக வீரர்கள் மீட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் வங்கதேசம் தலைநகர் டக்காவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 78 பேர் உடல் கருகி உயிரிழந்தச் சம்பவம் நடந்தேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.