வங்கதேசம் | BNP கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை.. பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களையும் தாண்டி அக்கூட்டணியே முன்னிலை வகித்து வருவதால், அக்கூட்டணியின் தலைவர் தாரிக் ரஹ்மான் விரைவில் பிரதமராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இது, அந்நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கட்சி தடை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியும் (BNP), அதன் போட்டியாளரும் ஒருகாலத்தில் அக்கட்சியின் கூட்டாளியுமாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் களத்தில் சந்தித்தன. தாரிக் ரஹ்மான் 10 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மறுபுறம், 11 கட்சிகளைக் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷ் (JIB) கூட்டணிக்கு ஷஃபிகுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 51 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் பி.என்.பி. கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. எனினும் தற்போது வரை பிஎன்பி கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களையும் தாண்டி முன்னிலையில் இருக்கிறது. தற்போது வரை 300 இடங்களில் 165 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் தனது இரண்டு தொகுதிகளிலும், போகுரா 6 மற்றும் டாக்கா 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறார். இதன் நெருங்கிய போட்டியாளரான ஜமாத்-இ-இஸ்லாமி 62 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிஎன்பி கூட்டணியின் வெற்றியால், தாரிக் ரஹ்மான் விரைவில் அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

