“இனி நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல” - பலூச் விடுதலை இராணுவம் அறிவிப்பு!
அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். இந்தப் பலூசிஸ்தான் மாகாணம் அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு, ராணுவம் மூலம் ஒடுக்கி வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி எல்லையில் ட்ரோன்களை ஏவின. இதை, இந்தியா தகர்த்தது. இந்த தாக்குதலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பலூச் விடுதலை இராணுவம், பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்கியது. இந்த நிலையில், தாங்கள் விடுதலை பெற்றுக்கொண்டதாக பலூச் விடுதலை இராணுவம் (BLA) அறிவித்துள்ளது. மேலும், ஐநா சபை தங்களை நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதோடு, பலூசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், “இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணம் என யாரும் குறிப்பிட வேண்டாம்” என பலூச் விடுதலை இராணுவம் (BLA) அமைப்பின் தலைவர் மிர் யார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ''1947 ஆகஸ்ட் 11இல் ஆங்கிலேயர் வெளியேறியபோதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம். இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐநாவும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்'' என கூறி உள்ளார்.