சிரியாவில் நடப்பது என்ன? உள்நாட்டு போரின் பின்னணி இதுதான்..!
உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாம்ஸ் நகருக்கு, அப்பகுதி மக்கள் மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர். தற்போது 150 குடும்பங்கள் அங்கு திரும்பியுள்ளன. அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஆயிரக்கணக்கான மக்கள் ஹாம்ஸ் நகரில் இருந்து அலிப்போ பகுதிக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தனர். அங்கு உணவு உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், மீண்டும் தங்களுடைய பகுதிக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஹாம்ஸ் பகுதி கடந்த மே மாதம் அரசுக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால், தற்போதுதான் அங்கு மக்கள் திரும்பத்தொடங்கியுள்ளனர். சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்களுக்கு அரசு உதவி வருகிறது.
சிரியாவில் நடப்பது என்ன?
மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த பல ஆட்சியாளர்களுக்கு எதிராக 2010-ஆம் ஆண்டு மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் தொடங்கிய இந்தப் புரட்சி, அருகில் இருந்த எகிப்துக்கும் பரவியது. இரு நாடுகளிலும் உடனடியாகவே ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டார்கள். ஆனால், லிபியாவில் சுமார் அதன் சர்வாதிகாரியான மம்மர் கடாஃபி, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் கொல்லப்பட்டார்.
அதன் பிறகு அரபு எழுச்சி மற்ற நாடுகளுக்கும் பரவியது. அதில் ஒன்றுதான் சிரியா. அங்கு பதவியில் இருந்தவர் பஷார் அல் அசாத். அவருக்கு எதிராகவும் புரட்சி தொடங்கியது. இதற்கான விதை பஷார் அல் அசாத்தின் தந்தையான ஹபீஸ் அல் அசாத்தின் காலத்திலேயே ஊன்றப்பட்டு விட்டது. இவர்களின் காலத்தில் தொழில்கள் வளர்ச்சியடைந்தன. அதே நேரத்தில் மக்களுக்கு எதிரான அரசு அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டது. இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு இன்னொரு காரணம் மதப் பிளவுகள்.
சிரியாவைப் பொறுத்தவரை அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்கள் என்றாலும் அவர்களுக்கு இடையே ஷியா, அலாவி, சன்னி உள்ளிட்ட பிளவுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மை சன்னிக்களை புறக்கணித்துவிட்டு, சிறுபான்மையினரான அலாவிக்களே ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய அதிபர் அசாத்தும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்தான்.
வேலைவாய்ப்புகளில் அலாவி இனத்தவருக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்தது. இதையடுத்து, பெரும்பான்மை சன்னி இனத்தவர் தொடங்கிய புரட்சி, பின்னர் ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது. லிபியாவில் மம்மர் கடாஃபிக்கு ஏற்பட்ட நிலையை உணர்ந்த சீனாவும் ரஷ்யாவும், தங்களது வர்த்தகக் கூட்டாளியான பஷார் அல் அசாத்தை ஆதரிக்கின்றன.
இந்த நேரத்தில் ஈராக்கில் இருந்து வந்த ஐ.எஸ். அமைப்பு, தனி நாடு கோரும் குர்துக்கள், அசாத்தைப் பிடிக்காத சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான் என பல தரப்பும் சிரியாவுக்குள் நுழைந்தன. நான்கு முனையாக நடக்கும் யுத்தத்தில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா, ஹிஸ்புல்லா இயக்கம், ஈரான் போன்றவை இருக்கின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி சண்டையிடுகிறது. அமெரிக்காவோ, குர்துக்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் நிற்கிறது. இவர்கள் அனைவரையும் ஒழித்துவிடத் துடிக்கிறது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம்.