சிறுவனின் அன்பு பரிசு.. எங்கு சென்றாலும் தீயணைப்பு வீரர்களுடன் பயணிக்கும் பொம்மை.!
மேற்கு அமெரிக்காவின் ஒரேகன் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனும், அவனுடைய பாட்டியும், செப்டம்பர் 12ஆம் தேதி, அங்குள்ள ஒரு தீயணைப்பு நன்கொடை மையத்திற்கு காதுகள் நீண்ட போராளியான பேபி யோடா ஒன்றை பரிசளித்துள்ளனர். அதில் ‘’நீங்கள் தனிமையை உணரும்போது இந்த நண்பன் உங்களோடு இருப்பான்’’ என அந்தச் சிறுவன் குறிப்பிட்டுள்ளான். அப்போது முதல், இரண்டு மாகாணங்களில் தீயணைப்பு வேலை, ஹெலிகாப்டர் பயணம், கொரோனா அறிகுறிகளை கண்டறிதல் போன்ற வேலைகளுக்குச் சென்றுள்ளான் பேபி யோடா. காரணம் யோடாவும் தற்போது அங்குள்ள தீயணைப்புப் படையில் ஒருவன்.
இதுகுறித்து சஷா டின்னிங் என்ற தீயணைப்பு வீரர் கூறுகையில், முதலில் யோடாவைப் பார்த்தபோது, அதை அனுப்பிய சிறுவனின் அன்பு வெளிப்பட்டது. நான் அங்கிருந்து திரும்பியபோது இந்த பேபி யோடா என்னையே பார்த்தது. அது க்யூட்டாகவும் இருந்தது. எனவே என்னுடன் பணிபுரிபவர்களிடம் இவனையும் நம்முடைய படையில் சேர்த்துக்கொள்ளலாம் எனக் கூறினேன். அவர்களும் இவனை நண்பனாக ஏற்றுக்கொள்ள சம்மதித்து விட்டனர்’’ எனக் கூறியுள்ளார்.
அதன்பிறகு எங்குசென்றாலும், ஒரு தோள்ப்பையில் பேபி யோடாவையும் கொண்டுசெல்கின்றனர். 31 வயதான டைலர் யூபேங்க்ஸ் என்ற பல்மருத்துவர் பேபி யோடாவுக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு தீயணைப்பு வீரர்கள் யோடாவின் புகைப்படங்களை அனுப்பி விடுவார்கள். அவர் அழகிய வரிகளுடன் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
’பேபி யோடா ஃபைட் ஃபயர்ஸ்’ என்ற பெயரில் இயங்கிவருகிற இந்த பேஸ்புக் பக்கத்தில், யோடாவின் பயணம் மற்றும் வேலைகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு வருகிறது. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும் இதை அனுப்பிய அந்த 5 வயது சிறுவனைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.