’வேலைநேரம் முடிந்தபின் ஆபீஸ் அழைப்பை நிராகரிக்கலாம்’ - ஆஸ்திரேலியாவில் ஆக.26 முதல் சட்டம் அமல்!
உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறமிருக்க, மறுபுறம் நிரந்தர வேலையினால் மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதாவது, பெரும்பாலான ஊழியர்கள், தமது பணி நேரம் முடிந்தபிறகும் நிறுவனத்திடமோ அல்லது மேலதிகாரிகளிடமோ அலுவலகரீதியாக தொடர்பில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதாவது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. பணியாளர்களின் விடுமுறையின்போதும் இதுபோன்ற ஆலோசனைகளைச் சில நிறுவனங்கள் பெறுகின்றன. இதனால், பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதைக் கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதாவது, வேலைநேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்புகொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
இந்த நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியாவும் தற்போது இணைந்துள்ளது. தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேட்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்புகொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
புதிய துண்டிக்கும் உரிமை (Right to Disconnect) சட்டத்தின்படி, "வேலை நேரத்திற்கு பின் அலுவலகம் அல்லது முதலாளிகளிடமிருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும். அலுவலக நேரம் முடிந்த பிறகு தேவையில்லாமல் தம்மைத் தொடர்புகொள்வதாகவோ அல்லது தொந்தரவு செய்வதாகவோ கருதும் ஊழியர்கள் முதலில் அலுவலகம் சார்ந்தவரிடமோ அல்லது முதலாளியிடமோ பிரச்சினையை எழுப்ப வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சிக்கல் தீர்க்கப்படாமல் இருந்தால், தொழிலாளிகள் வழக்கு தொடர்ந்து நியாய வேலை ஆணையத்திற்கு (Fair Work Commission) எடுத்துச் சென்று இதுபோன்ற தொந்தரவை நிறுத்த உத்தரவிடலாம், இதற்கு முதலாளி இணங்கத்தவறினால் அவர்களுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ அபராதம் விதிக்கப்படும்".
இதையும் படிக்க; கே.எல்.ராகுல் நடத்திய ஏலம்.. ரூ.40 லட்சத்திற்கு ஏலம் போன விராட் கோலியின் ஜெர்சி!