போலி பெயரில் 60 பேருக்கு விந்தணு தானம்! ஒரே முகஜாடையிலிருந்த குழந்தைகளால் குற்றம் அம்பலம்

போலி பெயரில் 60 பேருக்கு விந்தணு தானம்! ஒரே முகஜாடையிலிருந்த குழந்தைகளால் குற்றம் அம்பலம்
போலி பெயரில் 60 பேருக்கு விந்தணு தானம்! ஒரே முகஜாடையிலிருந்த குழந்தைகளால் குற்றம் அம்பலம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி போலி பெயர்களில் 60க்கும் மேற்பட்டவர்களுக்கு விந்தணு தானம் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாறிவரும் காலநிலை மற்றும் உணவுப் பழக்கவழக்கம் காரணமாக உலகம் எங்கும் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. என்றாலும், நவீன சிகிச்சை மூலம் தம்பதியினர் குழந்தைகளைப் பெற்றெடுத்து வருகின்றனர். இதில் விந்தணு தானம் முக்கியக் காரணம் வகிக்கிறது. விந்தணு தானம் பெறுவதற்கு என தனியாக சேமிப்பு வங்கிகளும், அமைப்புகளும் உள்ளன.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவிலும் குழந்தையின்மை பிரச்னை அதிகமாகவே உள்ளது. அதேநேரத்தில் அங்கும் விந்தணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் அதிகரித்து வருகிறது. பெற்றோராக நினைக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலரும் விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவதும் அங்கு வழக்கமாக உள்ளது. ஆஸ்திரேலியா சட்டப்படி விந்தணுக்களுக்குப் பணம் செலுத்துவதும் பரிசுகளை வழங்குவதும் சட்டவிரோதமானது. இதுதொடர்பான எந்த குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சட்டங்களை ஏமாற்றி போலி பெயர்களில் சுமார் 60க்கும் மேற்பட்டோருக்கு விந்தணுக்களை தானம் செய்துள்ளார். விந்தணு தானம் பெற்றவர்களில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் சிலர், சமீபத்தில் அனைவரும் நிகழ்ச்சி ஒன்றில் கூடியுள்ளனர். அப்போது, அவர்களின் குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களில் கருத்தரிப்பு மையத்துக்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான், ஒரே நபர் பல்வேறு பெயர்களில் ஏமாற்றி விந்தணு தானம் செய்தது தெரியவந்தது. 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றம் உறுதியானபோதும், குற்றவாளியின் பெயர் பற்றிய விவரம் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com