அகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா
அகதிகள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தை விடுவிக்குமாறு ஐ.நா. விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த தம்பதி நடேசலிங்கம் முருகப்பன் - கோகில பத்ம பிரியா. இவர்களில் பிரியா 2012 ஆம் ஆண்டிலும், நடேசலிங்கம் 2013 ஆம் ஆண்டிலும் புகலிடம் தேடி படகு மூலம் ஆஸ்திரேலியா சென்றனர்.
ஆனால் ஆஸ்திரேலிய அரசு அவர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடேசலிங்கம் - பிரியா தம்பதிக்கு கோபிகா, தருணிகா என இரு மகள்கள் பிறந்தனர். தற்போது கோபிகாவுக்கு 4 வயதும், தருணிகாவுக்கு 2 வயதும் ஆகின்றன.
இதைத்தொடர்ந்து நடேசலிங்கம் குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்த ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் இவர்கள் விமானம் மூலம் புறப்பட்டனர். அப்போது பாதி வழியில் விமானம் சென்றுகொண்டிருந்த போது ஆஸ்திரேலிய நீதிபதி, இவர்களது நாடு கடத்தும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதனால் பாதி வழியில் விமானம் மீண்டும் திருப்பப்பட்டு ஆஸ்திரேலியா கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு அவர்கள் 4 பேரும் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நடேசலிங்கம் குடும்பத்தினருக்காக ஆஸ்திரேலியாவில் சட்ட போராட்டம் நடத்தி வரும் பெண் வக்கீல் கரினா போர்டு என்பவர், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இதுகுறித்து மனு அளித்தார். அதை பரிசீலித்த ஐ.நா. மனித உரிமைகள் குழு, 30 நாட்களுக்குள் நடேசலிங்கம் குடும்பத்தைத் தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் ஐ.நா. விடுத்த கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து உள்துறை துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் “ஐ.நாவின் கோரிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதுகுறித்த வழக்கு ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.