8 லட்சம் ஹெக்டேருக்குப் பரவிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ - 3 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயால் 2000 ஹெக்டர் பரப்பளவிலிருந்த கோலா கரடிகள் சரணாலயம் தீக்கிரையாகின.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ பற்றி எரிகிறது. சுமார் எட்டரை லட்சம் ஹெக்டேர் பரப்பில் எரியும் தீயால் 150 வீடுகள் தீக்கிரையாகின. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன. காட்டுத் தீக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். மேலும் கங்காரு, கோலா கரடிகள் உள்ளிட்ட விலங்குகளும் காட்டுத்தீயில் சிக்கியுள்ளன.
காற்றின் வேகத்தால் காட்டுத்தீயானது தலைநகர் சிட்னி மற்றும் நியூசிலாந்து வரை பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த காட்டுத்தீயால் பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுத்தீயின் காரணமாக வெப்பம் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்பதால் சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட 10 ஆயிரம் கிலோ மீட்டர் தள்ளியுள்ள இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர் ட்ரென்ட் பென்மேன் தெரிவித்துள்ளார். ஜூனில் தொடங்கி செப்டம்பரில் முடிய வேண்டிய தென்மேற்குப் பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடித்ததால், ஆஸ்திரேலியாவுக்கு வரவேண்டிய குளிர்ந்த காற்று தடைபட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால், ஆஸ்திரேலியாவில் கோடை வெப்ப காலம் நீடித்ததே காட்டுத் தீ ஏற்படக் காரணம் என்றும் ட்ரென்ட் பென்மேன் கூறியுள்ளார்