இருதரப்பு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள நான்கு நாள் சண்டை நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இதனை மேலும் சில நாள்கள் நீடிப்பதன் மூலம் கூடுதல் பிணைக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். கூடுதல் நிவாரண உதவிகள் காசா மக்களை சென்றடைய சண்டை நிறுத்த நீட்டிப்பு உதவும் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் என இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளியன்று தொடங்கிய சண்டை நிறுத்தத்தினை அடுத்து இதுவரை ஹமாஸ் பிடியில் இருந்து 58 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 117 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலிய சிறைகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டதை மேற்குக் கரை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். காசாவில் ஹமாஸ் அல்லாது பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்டவைகளின் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளை கண்டறிந்து விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களை விடுவிப்பதன் மூலம் சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு கூடுதலாகும் என கத்தார் பிரதமர் கூறியுள்ளார்.