சவுதி அரேபிய எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் - அதிர்ச்சியில் வளைகுடா நாடுகள்
சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஆலை கிடங்கில் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
சவுதி அரேபியா மீது ஏமன் நாட்டிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தலைநகர் ஜெட்டாவில் உள்ள அரசின் அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குமீது நேற்று தாக்குதல் நடந்தது. எண்ணெய் கிடங்குகள் மீது ஏவுகணைகள் வந்து விழுந்ததாகவும் இதில் இரு கொள்கலன்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகப்புகழ் பெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 2ஆவது கட்டம் இன்று நடைபெற உள்ள இடத்தின் அருகேயே இத்தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் உரிய பாதுகாப்புடன் பந்தயம் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என சவுதி அரேபியா அண்மையில் தெரிவித்திருந்தது. ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். ஏமன் அரசுக்கு சவுதி ஆதரவு தந்து வரும் நிலையில் அந்நாட்டின் மீதும் கிளர்ச்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சிப்படையினருக்கு ஈரான் ஆதரவாக இருந்து வருகிறது.