உணவுக்காக கூட்டநெரிசலில் சிக்கி பறிபோன உயிர்கள்.. பாகிஸ்தானில் தொடரும் அவலநிலை!

பாகிஸ்தானில் கோதுமை மாவு விநியோகிக்கப்பட்டு வரும் மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் மக்களுக்கு கோதுமை விநியோகம்
பாகிஸ்தானில் மக்களுக்கு கோதுமை விநியோகம்ANI

பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கையைப் போன்றே, நம்முடைய இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தானும் அதே சிக்கலை தற்போது எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் கடன், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செலவுகள், குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, உலகளாவிய பணவீக்கம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஆகியவற்றை சமாளிக்க முடியாததால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது.

நிதிப் பிரச்சினையை சமாளிக்க பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியுள்ளது. இதனால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் கடுமையாக அதிகரித்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டது. தவிர உணவுபொருட்களின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் மக்கள் இந்த மாதம் ரம்ஜான் மாதத்தைக் கொண்டாடி வரும் சூழலில், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 1 கிலோ அரிசி ரூ.70ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல் பழங்களின் விலையும் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், பாகிஸ்தானில் மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் 35.37% ஆக அதிகரித்துள்ளது. இது முன் எப்போதும் இல்லாத உயர்வு என்று பாகிஸ்தான் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் 31.60% ஆகவும், ஜனவரியில் 27.60% ஆகவும் இருந்துள்ளது. உணவுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 34.6% ஆகவும், வீட்டு வாடகை பணவீக்கம் 23.60% ஆகவும், உடைகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் 8.60% ஆகவும் இருந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் உணவுப் பணவீக்கம் 47 சதவீதம் உயர்ந்துள்ளது. வீட்டு வாடகை பணவீக்கம் 17.50 சதவீதமும், துணிகள் மற்றும் காலணிகளின் பணவீக்கம் 21.90 சதவீதமும், போக்குவரத்துக்கான பணவீக்கம் 54.94 சதவீதமும் உயர்ந்துள்ளது.

மேலும், அந்நாட்டில் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் மூலம் கோதுமை மாவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனைப் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட பலபேர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, கராச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 பெண்களும் 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். கடந்த வாரம் முதல் இதுபோன்ற சம்பவங்களில் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில், பணவீக்கம் அதிகரித்து வருவதால், பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது
ஷாஹிதா விசாரத், பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர்

பாகிஸ்தானின் எரிசக்தி துறையில் உயர்ந்திருக்கும் கடன் சுமையும், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமும் இந்தப் பணவீக்கத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் நடப்பு ஆண்டில் பாகிஸ்தான் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருவதாகவும், இந்த விலைவாசி உயர்வால், ஏழை மக்களால் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட முடியாத சூழல் உருவாகி இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

”பாகிஸ்தானில், பணவீக்கம் அதிகரித்து வருவதால், பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது" என கராச்சியைச் சேர்ந்த ஆய்வாளர் ஷாஹிதா விசாரத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com