சீனா | நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து.. 82 பேர் பலி!
சீனாவில், நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 82 ஆக உயர்ந்துள்ளது.
வட சீனாவின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றான ஷான்சி, அந்நாட்டின் நிலக்கரிச் சுரங்கத் தலைநகரமாகப் பார்க்கப்படுகிறது. இம்மாகாணத்தில் உள்ள கின்யுவான் மாவட்டத்தில் லியுஷென்யு என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்தச் சுரங்கத்தில்ல் நேற்று இரவு நிகழ்ந்த எரிவெடிப்பு சம்பவத்தில், இதுவரை 82 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை எனவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்போது இந்தச் சுரங்கத்தினுள் 247 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, நிலக்கரி சுரங்கத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், இந்தச் சுரங்கத்தின் நுழைவாயில் சுமார் 30 டிகிரி செங்குத்தான சரிவைக் கொண்டிருப்பதால், மீட்புப் பணியில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் கவலை தெரிவித்துள்ளார். ”காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் அதிகாரிகள் எந்த முயற்சியையும் விட்டுவிடக்கூடாது” என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, சுரங்கத்தின் ஆழமான பகுதியில் கார்பன் மோனாக்சைடு வாயுவின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உயர்ந்ததே இந்த வெடிப்பிற்குக் காரணம் என நம்பப்படுகிறது. மேலும், சுரங்க நிர்வாகப் பொறுப்பில் இருந்த முக்கிய அதிகாரிகள் பலரை அரசு ஊடகங்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன. இந்த விபத்து சீனாவில் சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.
2000-களின் முற்பகுதியிலிருந்து, கடுமையான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான நடைமுறைகள் மூலம், பெரும்பாலும் எரிவாயு வெடிப்புகள் அல்லது வெள்ளப்பெருக்குகளால் ஏற்படும் நிலக்கரிச் சுரங்க மரணங்களை சீனா கணிசமாகக் குறைத்துள்ளது. இருப்பினும், லியுஷென்யு சம்பவம், கடந்த பத்தாண்டுகளில் சீனாவில் பதிவான மிகவும் கொடிய சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தேசிய சுரங்கப் பாதுகாப்பு நிர்வாகத்தின் (NMSA) அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2010 முதல் 2025 வரை சீனாவில் 3,000-க்கும் மேற்பட்ட சுரங்க விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

