ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான மோதல்களால் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான தாக்குதல்களுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் மாநிலத்தின் பாக்மன் மாவட்டத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கான் உளவுத்துறை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 6 பேர்படுகாயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை செய்த நபர் எப்படி வந்தார் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு தரப்பு காவல்துறையினர் கூறும்போது, வெடிகுண்டு நடத்திய நபரை பற்றியும் அவர் எங்கிருந்து வந்தார் என்பது குறித்தும் இன்னும் தெளிவாக விவரம் தெரியவில்லை. ஆனால் அவர் நடந்தோ அல்லது ஒரு வாகனத்தில் வந்ததாகவே முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தார்.
அதேசமயம் மற்றொரு அதிகாரி கூறும்போது, வெடிகுண்டு நடத்திய நபர் காரில் வந்ததாக கூறியுள்ளார். கடந்த நவம்பர் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரஃப் கானி பேசியிருந்த போது, 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 30,000 ஆப்கான் ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் அங்கு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.