நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேரை காணவில்லை. வடமேற்கு நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தில் உள்ள லோலோ கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நைஜர் நகரில் இருந்து அந்நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆற்றில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. கிராம சந்தை ஒன்றுக்கு செல்வதற்காக ஏராளமான வியாபாரிகள் கடந்த புதன்கிழமை அன்று படகில் ஏறியுள்ளனர். அதில் அதிகமான ஆட்களை ஏற்றியதால் நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில் 33 பேர் உயிரிழந்தனர். பலர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 23 பேரை காணவில்லை.
இதுபற்றி அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த சுலைமான் முகமது கரீம் கூறும்போது, ‘70 பேர் செல்லக்கூடிய படகில் 150 பேரும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களும் ஏற்றப்பட்டதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துள்ளது’ என்றார்.