‘இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருங்கள்’: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

‘இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருங்கள்’: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்
‘இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருங்கள்’: ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

எல்லையில் சுமூகமான சூழல் ஏற்பட வகை செய்ய இந்தியாவும், சீனாவும் தீவிர கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே கடுமையான தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் ஒருவர் உட்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல், சீன தரப்பிலும் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் என மொத்தம் 43 பேர் இருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில், நேற்று இருநாட்டு படையினரும் எல்லைப் பகுதியில் இருந்து தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் குறித்து பேசியுள்ள ஐ.நா பாதுபாப்பு கவுன்சில் அதிகாரி, “இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் உயிரிழப்புகள் கவலை அளிக்கிறது. இரு நாடுகளும் உச்சக்கட்ட கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இருநாடுகளும் தங்களது படைகளை எல்லைப்பகுதியில் இருந்து விலக்கிக்கொண்டதை நிலைமையின் தீவிரம் குறைவதற்கான நல்ல அறிகுறியாக பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், “ இந்தியா - சீனா இடையே எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவி வரும் சூழலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய ராணுவத்தினர் தரப்பில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லையில் தங்களது படைகளை திரும்ப பெறவிரும்புவதாக இருநாட்டு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். அமைதியான சூழல் நிலவ முழு ஆதரவு அளிக்கிறோம். ஜூன் 2ம் தேதி நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் மோடி இடையே இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com