பலாத்கார வழக்கில் இருந்து தப்பித்தார் அசாஞ்சே...
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பலாத்கார வழக்கைக் கைவிட ஸ்வீடனைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலாத்காரப் புகார் கொடுத்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈக்வெட்டார் தூதரகத்தில் உள்ள அசாஞ்சேவை ஸ்வீடன் அழைத்துச் சென்று விசாரணை நடத்த முடியவில்லை. ஏழு ஆண்டுகளாக அவரை அணுகமுடியாத காரணத்தால் அவர் மீதான இந்த வழக்கு கைவிடப்படுகிறது என்று ஸ்வீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல முக்கிய ரகசிய ஆவணங்களை அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. இதை அசாஞ்சே தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணையைக் கைவிடப்போவதாக ஸ்வீடன் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வீடன் அரசு வழக்கறிஞர் மேரியானே நேய், “ஜுலியன் அசாஞ்சே பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கும் வழக்கில் புலன்விசாரனையை நிறுத்திவிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
ஸ்வீடன் சட்டத்தைப் பொருத்தவரையில், எந்த ஒரு வழக்கையும் எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஈக்வடார் உரிய ஒத்துழைப்பை வழங்காததால் அவர்களால் முடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கை ஸ்வீடன் கைவிட முடிவு செய்து விட்டதாக மேரியானே நேய் தெரிவித்துள்ளார். இந்த வழக்கைக் கைவிட நேர்ந்ததற்கு வருந்துவதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கு 2020ல் தானாகவே முடிவுக்கு வந்து விடும். அதற்குள் ஒருவேளை அசாஞ்சே ஸ்வீடன் செல்ல நேரிட்டால் மீண்டும் இது தொடர்பான விசாரணை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கு விசாரணை கைவிடப்பட்டுள்ளது அசாஞ்சேவுக்கு வெற்றிதான் என்று அவரது வழக்கறிஞர் பெர்சாமுவேல் சன் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வெளியேறினால், லண்டன் போலீசால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால் ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க வேண்டும் என்ற வாரண்ட், அமெரிக்காவிடம் இருந்து கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இங்கிலாந்து மறுத்துவிட்டது.