நடு வானில் அலறிய பயணிகள்.. விமானத்தில் பற்றிய தீ.. இறுதியில் நடந்தது என்ன ?
நேற்று முன்தினம் அமெரிக்க நகரமான அட்லாண்டாவிலிருந்து டெக்சாஸின் டல்லாஸ் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான AA-2398 என்ற விமானம் 130க்கும் அதிகமான பயணிகளோடு சென்றுகொண்டிருந்துள்ளது.
அப்போது திடீரென விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் லேப்டாப் திடீரென தீப்பற்றியுள்ளது. விமானத்தில் தீ பற்றினால் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், விமானத்தில் இருந்த பயணிகள் அலறி துடித்துள்ளனர்.
தீ தொடர்ந்து விமானத்தில் பரவிய நிலையில், அதில் 5 பேருக்கு தீ காயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் அருகில் இருந்த விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளார்.
அதன் பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததால்தான் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
லேப் டாப்களில் பயன்படுத்தப்படும் 'லித்தியம்-அயன்' (Lithium-ion) பேட்டரிகளில் ஏற்படும் 'தெர்மல் ரன்அவே' எனப்படும் அதிகப்படியான வெப்பம் காரணமாகவே இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுகின்றன என அமெரிக்க ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்ட் வரை இந்த ஒரே ஆண்டில் மட்டும் பயணிகள் விமானங்களில் புகை அல்லது தீ விபத்தை ஏற்படுத்திய லித்தியம் பேட்டரிகள் சம்பந்தப்பட்ட 58 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் பயணிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

