கொத்தாகப் பிரியப்போகும் உயிர்கள்? ஒரு நாடே அழியப் போகிறது..? உலகை உலுக்கப்போகும் சம்பவம்!
‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்கிற ரஜினி பட வசனத்துக்கு ஏற்றமாதிரி, எத்தனையோ நாடுகள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு நேர்மாறாக ஒரு நாடு இருக்கிறது. அந்த நாடு, இன்னும் சில ஆண்டுகளில் உலக மேப்பிலிருந்து மறைய இருப்பதுதான் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த நாடு எங்கு இருக்கிறது விரிவாக பார்க்கலாம்...
உலகிலேயே மிக வேகமாக கடலில் மூழ்கி அழியும் அபாய எதிர்கொள்ளும் முதல் நாடாக துவாலு (Tuvalu) உள்ளது. தெற்குப் பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நாடு, வெறும் 26 சதுர கிலோமீட்டர் மொத்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த நாட்டின் தற்போதைய மக்கள்தொகை சுமார் 9,300 முதல் 11,000 இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. உலகிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட சுதந்திர நாடு வாடிகன் சிட்டி. இங்கு 500 முதல் 800 பேர் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட சுதந்திர நாடாக துவாலு உள்ளது.
இந்த நாட்டின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. ஃபனாஃபுட்டி கடல் அலைமானித் தரவுகளின்படி, இங்கு கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 3.9 மில்லி மீட்டர் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இது, உலகளாவிய சராசரி உயர்வைவிட இரண்டு மடங்கு வேகமாகும். உலகளாவிய புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. துவாலு அமைந்துள்ள பகுதியில் உலகச் சராசரியைவிட இருமடங்கு வேகத்தில் கடல் மட்டம் உயர்கிறது.
கடந்த நூற்றாண்டில் உலகளவில் கடல் மட்டம் 0.2 மீட்டர் உயர்ந்துள்ளது. கடல் நீர் நிலத்திற்குள் ஊடுருவுவதால் நிலத்தடி நீர் உவர்நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடல் அலைகளின் சீற்றம் மற்றும் அடிக்கடி தாக்கும் புயல்களால் கடற்கரைகள் வேகமாக அரித்துச் செல்லப்பட்டு வருகின்றன.
இத்தகைய சுற்றுச்சூழல் பிரச்னைகளால், அதாவது தற்போதைய நிலையே தொடர்ந்தால் 2050 முதல் 2100-க்குள் துவாலுவின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்குள் மூழ்கி மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நாசா (NASA)எச்சரித்துள்ளது. மற்றொரு புறம், தொலைக்காட்சி மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் .tv என்ற இணையதள முகவரி (Domain Extension) துவாலு நாட்டிற்குச் சொந்தமானதாகும்.
இந்த டொமைனை, குத்தகைக்கு விட்டதன்மூலம் கிடைக்கும் வருவாயே நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழலில், நாட்டைக் காக்கும் முயற்சியில், ஐ.நா (UNDP) உதவியுடன் செயற்கை நில மீட்புப் பணிகள் மற்றும் கடல் அலையைத் தடுக்கும் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தங்களின் கலாசாரம், இறையாண்மை மற்றும் வரலாற்று நினைவுகளை அழியாமல் காப்பாற்ற, துவாலு அரசு தன் நாட்டையே 'மெட்டாவர்ஸ்' (Metaverse) தொழில்நுட்பம் மூலம் முழுமையான டிஜிட்டல் நாடாக (Digital Twin)மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எந்த நாடும் அழியக் கூடாது; அழியவும் விடக்கூடாது... அதற்கேற்ற உதவிகளைப் பிறநாடுகளும் செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் கூற்றாக உள்ளது.

