'ரஷ்ய படையெடுப்பு எந்த நேரத்திலும் நிகழலாம்' -அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் எச்சரிக்கை
உக்ரைனில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில், நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எந்த நேரத்திலும் நிகழலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்துள்ள ரஷ்யா, எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. போர் பயிற்சிக்காகவே எல்லையில் படைகளை குவித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்து வந்தாலும் அமெரிக்கா அதனை ஏற்க மறுத்து வருகிறது.
இதற்கு மத்தியில் கிழக்கு உக்ரைனில் உள்ள டன்ட்ஸ்க் மாகாணத்தில் தனிநாடு கேட்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் போராடி வரும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஒன்றில் உக்ரைன் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக ரஷ்யாவுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா வேண்டுமென்றே பதற்றத்தை ஏற்படுத்தி படையெடுப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் வரும் வாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்றும் அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதை முன்மொழிவதாகவும், அதற்கான இடத்தை ரஷ்யாவே தேர்வு செய்யட்டும் என்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை
இதையும் படிக்க: 'ரஷ்யா மீது கடும் பொருளாதார தடை விதிக்க நேரிடும்' - கமலா ஹாரிஸ் எச்சரிக்கை

