குண்டுகளை துளைக்கும் காதல் - இதுவும் கடந்துபோகும் என வாக்குறுதியா? பிரியா விடையா?
உக்ரைன் மீது ரஷ்யா போர்புரிந்து வரும் நிலையில், கியேவ் மெட்ரோ நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
'இத்தனை பிரச்னைக்கும் நடுவே ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என்பார் பிரபஞ்சன். அப்படித்தான் இருந்தது அந்த புகைப்படம். உக்ரைன் நாடே போர் பதற்றத்தில் இருக்கும்போது, கியேவ் மெட்ரோ நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் காதல் வாசம் வீசுகிறது. கட்டடங்கள் எங்கும் புகைமூட்டமும், குண்டுகளின் சத்தமும் ஒலித்துக்கொண்டிருக்க கியேவ் மெட்ரோ நிலையமும் அதற்கு தப்பவில்லை. அங்கிருக்கும் மக்கள் பதட்டத்துடன் குழந்தைகளை சுமந்துகொண்டு அங்கும் இங்குமாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். சிலர், தங்கள் அன்புக்குரியவர்களையும், குடும்பத்தினரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து அறிந்து கொண்டும் வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கின்றனர்.
இந்தனை குண்டுகளுக்கும் நடுவே ஒரு காதல் பூக்கத்தானே செய்கிறது?..இத்தனை பதற்றத்துக்கும் நடுவே கியேவ் மெட்ரோ ரயில் நிலையத்தில் AFP புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒரு கவிதை போல இந்த படம் பல்வேறு அர்த்தங்களை நமக்கு புரிய வைக்கிறது. அவர்கள் கண்களில் பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. இது இறுதி விடையா அல்லது இதுவும் கடந்து போகும் என்ற வாக்குறுதியா? என்பது மட்டும் தெரியவில்லை.