பொலிவியா | முன்னாள் அதிபருக்கு கைது வாரண்ட்! பின்னணி வழக்கு இதுதான்!
தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை அதிபராக இருந்தவர், ஈவோ மொராலஸ். இவர், தனது ஆட்சிக்காலத்தில் மைனர் சிறுமி ஒருவரைக் கடத்திச்சென்று, அவருடன் உறவு வைத்துக்கொண்டதாகவும், இவர்களுக்கு ஒரு குழந்தை ஒன்று உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று பொலிவியாவின் தெற்கு நகரமான தரிஜாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்தத் தீர்ப்பை அந்நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மறுபுறம், நீதிமன்றத்திற்கு வெளியே, பெண்கள் குழு ஒன்று மொராலஸுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் பதாகைகளை ஏந்திப் போராட்டத்தில் நீதி கோரினர். இதற்கிடையே விசாரணையின்போது ஈவோ மொராலஸ் வழக்கறிஞர்கள், அவருக்கு உடல்நலப் பிரச்னை இருப்பதாக வாதிட்டனர்.
என்றாலும், விசாரணைக்கு இரண்டாவது முறையும் அவர் ஆஜராகாத காரணத்தால், ஈவோ மொராலஸுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சொத்துக்களை முடக்கவும், நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், எந்த தவறையும் ஈவோ மொராலஸ் செய்யவில்லை என்றும், வேண்டுமென்றே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, இந்த வழக்கில் மொராலஸுக்கு எதிராகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மறுபுறம், அவர் எங்கிருக்கிறார் என்பது பகிரங்கமாகத் தெரிந்தாலும், அரசுத் தரப்பால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை காவல்துறையால் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை.
முன்னதாக, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தன்னைத் தகுதி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டத்தை அதிபர் லூயிஸ் ஆர்ஸின் அரசு திட்டமிட்டிருப்பதாக மொராலஸ் குற்றம்சாட்டியுள்ளார்.