’ம்ஹூம்...உங்க பணம் வேண்டாம்’: மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த சென்டிமென்ட் கொள்ளைக்காரன்!
துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், மூதாட்டி கொடுத்த பணத்தை வாங்காமல் அவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வடகிழக்கு பிரேசிலில் உள்ள அமரன்டேவில் மருந்துக்கடை ஒன்றுக்கு கைகளில் துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். முகத்தை ஹெல்மெட்டால் மூடியிருந்தனர். கடைக்குள் இருந்தவர்கள் இவர்களை பார்த்ததும் கைகளை உயர்த்தினர். ஒரு கொள்ளையன், கல்லாவில் இருந்த ஆயிரம் டாலரையும் சில பொருட்களையும் கொள்ளையடித்தான்.
அப்போது, அருகில் இருந்த மூதாட்டி ஒருவர் நடுங்கும் கைகளில், தன்னிடமிருந்த பணத்தை அங்கு நின்றிருந்த மற்றொரு கொள்ளையனிடம் கொடுத்தார். அதை அன்போடு நிராகரித்த அந்த துப்பாக்கிக் கொள்ளையன், ’இல்லம்மா, நீங்க சும்மாருங்க. உங்க பணம் வேண்டாம்’ என்று கூறிவிட்டு, அவர் நெற்றியில் முத்தமிட்டான்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சென்டிமென்ட் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.