நகைக்கடை கொள்ளையனை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய மக்கள்!
லண்டனில் நகைக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தப்பிய கொள்ளையனை, நடுரோட்டில் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினர்.
மேற்கு லண்டனின் உக்ஸ்பிரிட்ஜ் சாலையில், சுல்தான் ஜூவல்லரி என்ற நகைக் கடை இருக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்தத் தெருவில் ஹெல்மட் அணிந்த 3 பேர் சுத்தியலுடன் இறங்கி நகைக்கடைக்குள் நுழைந்தனர். அங்கிருந்தவர்களை மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்தனர். பின் சுருட்டிய நகைகளுடன் வெளியே வந்தனர்.
வரும் போது கடையின் கண்ணாடி கதவுகளையும் சொகுசு கார் ஒன்றின் கண்ணாடியையும் உடைத்துவிட்டுத் தப்பியோடினர். அப்போது வெளியே நின்றிருந்த சிலரை ஒரு கொள்ளையன் சுத்தியலால் அடித்துவிடுவதாக மிரட்டிவிட்டு ஓடினான். இதையடுத்து இரண்டு இளைஞர்கள் அந்தக் கொள்ளையர்களைத் துரத்தினர்.
பயந்து ஓடிய ஒரு கொள்ளையன், சாலையில் தடுமாறி விழுந்தான். இதைக் கண்டதும், சாலையில் சென்று கொண்டிருந்த வர்களில் சிலர், ஓடி வந்து அவனை சரமாரியாகத் தாக்கினர். அதற்குள் அங்கு வந்த போலீசார், கொள்ளையனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மற்றக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
கொள்ளையனை பொதுமக்கள் தாக்குவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.