”ஐநா ஒரு பயனற்ற அமைப்பு” - அர்ஜென்டினா அதிபர் கடும் தாக்கு!!
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் விவாதக் கூட்டத்தில் உரையாற்றியுள்ள ஜேவியர் மிலேய், ஐநா தனது அடிப்படை நோக்கங்களில் இருந்து விலகி ‘பயனற்ற அமைப்பாக’ மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 28-ம் தேதி இந்தக் கூட்டத்தொடர் நிறைவடையவுள்ள நிலையில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்று, உரையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் தான், ஐநா விவாதக் கூட்டத்தில் பேசிய அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய், கூட்டு பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய அமைப்பு, அதற்கு பதிலாக குழப்பம், வன்முறை மற்றும் சர்வதேச பயங்கரவாதம் நீடிக்க வழிவகுத்துள்ளதாக ஐநா அமைப்பின் மீது கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும், ஐநா ஒரு "பயனற்ற அமைப்பாக" மாறிவிட்டதாகவும், நல்ல நோக்கமுடைய அதிகாரிகள் என்ற போர்வையில் செயல்படும் அதிகாரத்துவ அமைப்பை மட்டுமே அது ஆதரிப்பதாகவும் மிலேய் கடுமையாக சாடினார். குறிப்பாக, அர்ஜென்டினாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நீண்டகால ஃபாக்லாந்து தீவுகள், அதாவது மால்வினாஸ் தீவுகள் தொடர்பான இறையாண்மை பிரச்சினையையும் அவர் எழுப்பினார்.
இந்த விவகாரத்தில், ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மிலேய் குற்றம்சாட்டியதுடன், "வார்த்தைகளுக்கும் தீர்மானங்களுக்கும் பஞ்சமில்லை... ஆனால், அவற்றை மீறுபவர்களுக்கு விளைவுகள் இல்லை" என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், ஃபாக்லாந்து தீவுகள் விவகாரத்தில் பிரிட்டன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் எனவும் அதேநேரம், ஐநாவை விமர்சித்தாலும், சர்வதேச அமைப்புகளில் அர்ஜென்டினா தொடர்ந்து பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
