ஐபோன் விற்பனை சரிவு...ஆப்பிள் சிஇஓவுக்கு சம்பளமும் சரிவு
ஐபோன் விற்பனையில் ஏற்பட்ட சரிவால் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம்குக்கின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது.
உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனம், டெக் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய பெருமை கொண்டது. கேட்ஜெட் வரிசையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளே முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை வாங்க முதல் நாள் இரவு முதலே வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2016-ல் குறைந்ததால் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 17 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. தலைமை செயலதிகாரி டிம் குக்கின் ஆண்டு ஊக்கத்தொகை இந்திய மதிப்பில் ரூ.70 கோடியே 20 லட்சத்தில் இருந்து ரூ.59 கோடியே 64 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை கடந்த 2016ம் ஆண்டில் 3.7 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

