காஸாவில் உச்சக்கட்ட பதற்றம்.. மீண்டும் மருத்துவமனை அருகே வெடிகுண்டு வீச்சு

காஸாவில், அல் அஃஹ்லி மருத்துவமனையை தொடர்ந்து அல் - குத்ஸ் மருத்துவமனைக்கு அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது, அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், காஸாவில் உள்ள அல் அஃஹ்லி மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காஸாவில் உள்ள அல்- குத்ஸ் மருத்துவமனை அருகே வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டதாக பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால், அல்-குத்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். வெடிகுண்டு சத்தம் கேட்டவுடன் தரைத்தளத்தில் உள்ள நோயாளிகள் பதறியடித்துக் கொண்டு ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். பதிலடியாக காஸாவிற்குள் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை சுமார் 3,450 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது காஸா மீது தரைவழித் தாக்குதலைத் தொடுக்க இஸ்ரேல் ராணுவத்தினர் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com