“ கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதுதான் நான் பார்த்த முதல் வேலை”- கமலா ஹாரிஸ்
அமெரிக்க நாட்டின் துணை அதிபராக அண்மையில் பதவி ஏற்றுக் கொண்டவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ். இவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இந்நிலையில் தன் அம்மா ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், பணி செய்த ஆய்வகத்தில் உள்ள கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதுதான் தான் பார்த்த முதல் வேலை என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அங்குள்ள தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கமலா ஹாரிஸ் வந்திருந்தபோது இந்த மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவரது அம்மா ஷியாமளா புற்றுநோய் ஆய்வறிஞராக பணியாற்றியவர்.
“அம்மா எப்போதுமே மேரிலாந்தில் உள்ள Bethesdaவுக்கு தான் செல்வார். அது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அம்மா தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பயோகெமிக்கல் எண்டோகிரைனாலஜி பிரிவில் தான் வேலை பார்த்தார். அதனால் எப்போதுமே வார இறுதி நாட்களிலும், பள்ளிக்கூடம் முடிந்த பிறகும் நானும், என் சகோதரியும் இங்கு தான் வருவோம். அம்மா வேலை பார்த்த ஆய்வுகூடத்தில் உள்ள Pipettesகளை நான் சுத்தம் செய்வேன். அது தான் நான் பார்த்த முதல் வேலை. வாழ்க்கையில் எங்கள் அம்மாவுக்கு இரண்டே இலக்கு தான். ஒன்று எங்களை நல்லபடியாக வளர்ப்பது, மற்றொன்று மார்பக புற்று நோய்க்கு தீர்வு காண்பது” என சொல்லியுள்ளார் கமலா ஹாரிஸ்.
அதோடு தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியையும் அவர் பாராட்டியுள்ளார்.