
சமீபகாலமாக, விமானங்களில் சிறுநீர் கழிக்கும் விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில், அமெரிக்க விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண் பயணி கழிவறையைப் பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால், அப்பெண் கழிவறையைப் பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. விமானத்தின் கழிவறை பூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், தன்னை கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கும்படி அப்பெண் பயணி விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரமாக அப்பெண் பயணி கழிவறையை பயன்படுத்த விமான ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி, விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த நிலையில் தன் இருக்கை அருகேயே சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று சிறுநீர் கழித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.