அமெரிக்கா vs ஈரான் - இரு நாடுகளின் ஆயுத மற்றும் ராணுவ பலம் என்ன ?

அமெரிக்கா vs ஈரான் - இரு நாடுகளின் ஆயுத மற்றும் ராணுவ பலம் என்ன ?
அமெரிக்கா vs ஈரான் - இரு நாடுகளின் ஆயுத மற்றும் ராணுவ பலம் என்ன ?

அமெரிக்கா - ஈரான் நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளின் ராணுவ பலம் என்ன ? என்பதை காண்போம்.

ராணுவ பலத்தில் ஒரு நாட்டை மட்டுமல்ல உலகையே சுக்கு நூறாக சிதறடிக்கும் வல்லமை உண்டென்றால், அது நிச்சயம் அமெரிக்காவுக்கு தான் இருக்கும். காரணம், அத்தனை ஆயுத சக்திகளையும் கொண்டு ராணுவத்தில் அசுர பலத்துடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. வலிமை வாய்ந்த அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் ஈரான், ராணுவ பலத்தில் 12-வது இடத்தில் உள்ளது.

சுமார் 1 கோடி கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள அமெரிக்கா, 32 கோடி பேர் மக்கள் தொகையை கொண்டுள்ளது. சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள ஈரான், ஏறக்குறைய 8 கோடி பேரை மக்கள் தொகையை கொண்டிருக்கி‌ன்றது.

அமெரிக்காவில் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை வாங்குவது, பராமரிப்பது, பாதுகாப்பது என பாதுகாப்புத் துறைக்கு மட்டும் ஆண்டுதோறும் 33 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதில் 3.1 சதவீதம் உள்நாட்டு ஆயுத உற்பத்திக்கு செலவிடப்படுகிறது. ஈரானில் பாதுகாப்புத் துறைக்கு வெறும் 1 லட்சம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்படுகிறது. அவற்றில் 2.5 சதவீதம் உள்நாட்டு ஆயுத உற்பத்திக்கு செலவு செய்யப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தில் சுமார் 21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 கோடி பேர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஈரானில் 9 லட்சம் பேர் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், சுமார் இரண்டரை கோடி பேர் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்க ஆயுதங்களுடன் ஈரானின் ஆயுதங்களை ஒப்பிடுவது, மலைக்கும் மடுவுக்குமான ஒப்பீடை போன்றது.

அமெரிக்காவில் 6 ஆயிரத்து 393 பீரங்கி டாங்குகள் உள்ள நிலையில், ஈரானிலோ 2 ஆயிரத்து 531 பீரங்கி டாங்குகள் உள்ளன. அமெரிக்க விமானப் படையில், 3 ஆயிரத்து 236 போர் விமானங்களும், 4 ஆயிரத்து 889 ஹெலிகாப்டர்களும் உள்ளன. ஈரான் விமானப் படையில் மொத்தம் 850 விமானங்கள் உள்ளன. அதில் 255 தாக்குதல் விமானங்களும், 324 ஹெலிகாப்டர்களும் உள்ளன. அமெரிக்க கப்பல் படைக்கு சொந்தமாக 437 கப்பல்கள் உள்ள நிலையில், அவற்றில் விமானம் தாங்கிக் கப்பல்கள் 20. உலகின் பல பகுதிகளில் 71 நீர் மூழ்கிக் கப்பல்களும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளன. ஈரான் கடற்படையில் 406 கப்பல்களும், 40 நீர் மூழ்கி கப்பல்களும் உள்ளன.

மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதத்தை பொறுத்தவரை 6 ஆயிரத்து 500 அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளது. அதில் ஆயிரத்து 600 அணு ஆயுதங்கள் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஈரானை பொறுத்த இன்னும் ஒரு அணு ஆயுதத்தைக் கூட தயாரிக்கவில்லை என பேசப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com