பின்லேடன் உடலை கடலில் வீசப் பயன்பட்ட அமெரிக்காவின் போர்க்கப்பல்
ஒரு நாட்டின் படை வலிமையில் விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகின் மிகச் சில நாடுகளிடம் மட்டுமே உள்ள விமானம் தாங்கிக் கப்பல்களில் ஒன்றுதான் கார்ல்வில்சன். அமெரிக்கவின் பிரம்மாண்டப் போர்க்கப்பல்.
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வில்சன், மிக நவீன விமான ஓடுதளத்தைக் கொண்டது. அமெரிக்காவின் பிராந்திய வலிமையை உறுதி செய்யும் இந்தக் கப்பல், நிமிட்ஸ் வகையைச் சேர்ந்தது. ஜார்ஜியா மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல்வில்சன் நினைவாக இந்தக் கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
1092 அடி நீளம் கொண்ட கார்ல் வில்சன் 1 லட்சம் டன் எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. வழக்கமான எரிவாயு அல்லது டீசல் மின் சக்திக்குப் பதிலாக அணுசக்தியில் இயங்குகிறது இந்தக் கப்பல். மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தக் கப்பல், ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து இயங்கும். ஒரே நேரத்தில் சுமார் 90 போர் விமானங்களைச் சுமந்து செல்லும். தாக்க வரும் விமானங்களை அழிக்கும் ஏவுகணைகளும், ஏவுகணைகளைத் தடுக்கும் அமைப்பும் இந்தக் கப்பலில் நிறுவப்பட்டுள்ளன. விமானங்கள் பறப்பதற்கு வசதியாக விமான ஓடுதளம் 9 டிகிரி அளவுக்கு வளைந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் விமானங்கள் இறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் முடியும் என்பது கார்ல் வில்சன் ரக கப்பலின் சிறப்பு. இவை தவிர, அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தக் கப்பலில் இருப்பதாகக் கூறப்படுவதுண்டு. இதன் காரணமாகவே இந்தக் கப்பல்கள் ஏதாவது நாட்டின் கடற்கரைக்குச் செல்லும்போது அங்குள்ள அணுசக்தி எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்துவது வழக்கமாகிவிட்டது. இந்தக் கப்பல் ஒன்றைத் தயாரிப்பதற்கு ஆகும் செலவு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
நிமிட்ஸ் வகையிலான முதல் கப்பல் 1975-ம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. கடைசியாக 2009-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்த யுஎஸ்எஸ் ஜார்ஜ் புஷ் என்ற கப்பல் நிமிட்ஸ் வகையைச் சேர்ந்ததுதான். உலகமெங்கும் அமெரிக்கா நடத்திய பல போர்களில் நிமிட்ஸ் கப்பல்கள் பங்கெடுத்துள்ளன. ஈரானில் நடந்த ஆபரேசன் ஈகில் க்லா, ஈராக் மீதான வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. கார்ல் வில்சன் கப்பலைப் பொறுத்தவரை, பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவரது உடலை கடலில் வீசுவதற்குப் பயன்பட்டது என்கிறார்கள்.
அமெரிக்காவின் வல்லாதிக்கச் செல்வாக்கை சர்வதேசக் கடல்களில் கடந்த 35 ஆண்டுகளாக நிலைநிறுத்தி வந்திருக்கும் நிமிட்ஸ் ரகத்தைச் சேர்ந்த கார்ல் வில்சன் கப்பல் கொரியப் பிராந்தியத்துக்குள் நுழைந்துள்ளது. அது எதற்கு என்பது எல்லோருக்கும் புரிந்ததுதான்.