சீண்டிப் பார்க்க வேண்டாம்: வடகொரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என வடகொரியாவுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் தென்கொரியாவுக்கு சென்றிருந்தார். அங்கு தென் கொரிய நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், வடகொரியாவைத் தனிமைப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த ட்ரம்ப், வடகொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து நட்பு நாடுகளை காப்பாற்ற அமெரிக்கா உறுதி பூண்டு இருப்பதாகவும், தேவைப்பட்டால் முழு ராணுவ பலத்தை பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரித்தார். இதைத் தொடர்ந்து பேசிய தென்கொரிய அதிபர் மூன், வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பதற்றம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையால் நிச்சயம் குறையும் என்றும், இந்த விவகாரத்தில் திருப்புமுனை ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையடுத்து வட மற்றும் தென்கொரியா இடையே பாதுகாக்கப்பட்ட பகுதியை பார்வையிட ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். அதன்படி அந்த பகுதிக்கு செல்ல அவர் முயற்சித்தபோது மோசமான வானிலை குறுக்கிட்டது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் முயற்சியை அதிபர் ட்ரம்ப் கைவிட்டார்.