“அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி” - இந்தியாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை இந்தியா கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வரும் அதிபர் ட்ரம்ப், அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மோடியுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். அதில் பல ஆண்டுகளாகவே இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதித்து வருகிறது. சமீப காலமாக வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியாவின் வரிவிதிப்பு ஏற்றுக் கொள்ளமுடியாதது எனக் கூறியுள்ள ட்ரம்ப், கட்டாயம் இந்த வரிகளை இந்தியா திரும்ப பெற வேண்டுமென எச்சரித்துள்ளார். பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவுக்கு வழங்கி வந்த சலுகைகளை அமெரிக்கா திரும்ப பெற்றது. இதற்குப் பதிலடியாக பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட 28 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரிகளை சமீபத்தில் இந்தியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

