3 மாதத்தில் 297 மணி நேரத்தை டிவி, செல்போனுக்கு செலவழித்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெரும்பாலான நேரம் தொலைக்காட்சி காண்பது, ட்விட்டரில் பதிவிடுவது போன்ற பணிகளிலேயே அதிகம் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக ரகசியமானதாக கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பணி அட்டவணை ஆக்ஸியோஸ் என்ற இணையதளத்தில் வெளியாகி இருப்பதால், வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்களுக்கான பணி அட்டவணை, அதில் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிபர் ட்ரம்ப் , காலை 11 மணிக்கு தன்னுடைய அலுவலக பணிகளை தொடங்குகிறார்.
அவரது மூன்று மாத பணி அட்டவணையை ஆய்வு செய்ததில் 60 சதவிகித நேரம் போனில் பேசுவது, செய்தித்தாள் வாசிப்பது, ட்விட்டரில் பதவிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பணிகளில்தான் ஈடுபட்டுள்ளார். மூன்று மாதங்களில் 297 மணி நேரம் 15 நிமிடங்கள் இதற்காக செலவிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் வெளியானதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபரின் தனி செயலாளர், நாட்டுக்காக எத்தனை தொலைபேசி அழைப்புகளையும் கூட்டங்களையும் அதிபர் நடத்துகிறார் தெரியுமா? அவற்றை ஏன் வெளியிடவில்லை என வினவியுள்ளார். அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைக்கும் அதிபர் என்றும் ட்ரம்பை அவர் கூறியுள்ளார்.

