
வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக அழிக்க வேண்டுமெனில் தரை வழி படையெடுப்பால் மட்டுமே சாத்தியமாகும் என அமெரிக்காவின் ராணுவ அமைப்பான பென்டகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து ஜப்பான் மீது ஏவுகணையை பறக்கவிட்டு மீண்டும் வடகொரியா பதட்டமான சூழலை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஐ.நா விடுத்த எச்சரிக்கையையும் மதிக்கமால் வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா-வடகொரியா இடையேயான கருத்து மோதல் உச்சத்தை எட்ட, இரு நாடுகளும் போர் புரியும் முனைப்புடன் இருந்து வருகின்றன.
இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக அழிக்க வேண்டுமெனில் தரை வழி படையெடுப்பால் மட்டுமே சாத்தியமாகும் என அமெரிக்க ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அட்மிரல் மிச்சேல் டூமோண்ட், அமெரிக்க எம்.பி டெட் லையுவுக்கு எழுதிய கடிதத்தில் இந்த போரினால் எத்தனை வீரர்கள் உயிரிழப்பார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் மீண்டும் பதட்டமான போர் சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.