கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருள் ஏற்றுமதி - இந்தியா மீதான தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு
கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் தடுப்பூசிகளுக்கான மூலப்பொருள்களுக்கு அமெரிக்காவை சார்ந்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கவேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும் அமெரிக்க அரசு அதற்கு செவி சாய்ப்பதாக இல்லை. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடவே முன்னுரிமை அளிக்கிறோம் என பைடன் நிர்வாகம் பிடிவாதமாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நிலையில் அஸ்ட்ரஸென்கா உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்து மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிதா தலிப், பைடனின் பிரசாரத்தின்போது நிதி திரட்டிய ஷேகர் நரசிம்மன் உள்ளிட்ட பலரும் இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்ப ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளனர்.