அமெரிக்காவில் உள்ள கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் 16 ஆண்டுகளாக தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் முதலை ஒன்று முட்டையை ஈன்றிருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் உள்ள கருவை ஆய்வு செய்ததில், பெண் முதலையைப் போன்று 99.9 சதவீதம் இருந்துள்ளது. இது முதலை இனத்தில், அரிய இனப்பெருக்க உத்தியை முதல்முறையாக ஆவணப்படுத்தி உள்ளது. மரபணுவை ஆராய்ந்ததில், தனது ஆண் முதலையுடன் இணை சேராமல், முட்டை இட்டிருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இதனை 'கன்னி பிறப்பு' (Virgin Birth) என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. டைனோசர்ஸ் போன்ற உயிரினங்களுக்குப் பிறகு தற்போது பெண் முதலை ஒன்று தானாகவே முட்டையிட்டுள்ளது குறித்து விலங்கியல் வல்லுநர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை குறித்து ஆராய்ச்சி நடத்தி பையாலஜி லெட்டர் ஜர்னல் மாத இதழில் வெளியிடப்பட்டது.
மருத்துவத் துறையில், பிற உயிரின் பாலியல்ரீதியான உதவியின்றி தானாகவே கர்ப்பமாகும் முறைக்கு ஃபேகல்டேடிவ் பார்தினோஜெனிசிஸ் (facultative parthenogenesis) எனப்படுகிறது. இந்த முறையில் சில பறவைகள், பல்லி, மற்றும் பாம்பு வகைகள் கருவுற்று புதிய உயிரினங்களைத் தோற்றுவிப்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் முதலை பிற உயிரின் எந்த உதவியுமின்றி கருவுற்று முட்டையிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.