
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாசுக்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில், ஆலன் நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பிரபலமான வணிகத் தளம் ஒன்று உள்ளது. இந்த வணிகத் தளத்துக்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வார இறுதிநாளான நேற்றும் (மே 6) மக்களால் வணிகத் தளம் நிரம்பியுள்ளது.
இந்நிலையில்தான், அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் திடீரென்று மர்ம நபர் ஒருவர், மாலில் உள்ளவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதில், மர்ம நபர் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்டதாக நகர காவல் துறைத் தலைவர் பிரையன் ஹார்வி தெரிவித்துள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அந்த மர்ம நபர், தனது துப்பாக்கியின் மூலம் எல்லா திசைகளையும் நோக்கி வேகமாகச் சுட்டுக் கொண்டிருந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் வணிகத் தளத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நின்றபோது, அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அமைதியாக, தங்கள் கைககளை உயர்த்திக் காட்டி பாதுகாப்பு கோரி வெளியே செல்வதை இணையதள படங்கள் வெளியிட்டுள்ளன. மர்ம நபர் சுட்டதற்கான காரணமும், அவர் யார் என்பது பற்றிய விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை.
அதேநேரத்தில், துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்டவர்களில் 9 பேரில், இருவர் தற்போது உயிரிழந்திருப்பதாகவும், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயம்பட்டவர்களில் 5 வயது குழந்தைகளும் அடக்கம் எனச் சொல்லப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட், ”இது, விவரிக்க முடியாத ஒரு சோகம். உள்ளூர் அதிகாரிகளுக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் வழங்க அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் மீண்டும் அதிகரித்து வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.