“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்”- சுந்தர் பிச்சைக்கு கடிதம்
“பணியிடங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் பித்து பிடித்தவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்" என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 1378 ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை எழுதி, அனுப்பியுள்ளனர். இந்த மடலை எழுதிய ஊழியர்கள் அனைவரும் கூகுளின் ஆல்பாபெட்டில் பணியாற்றி வருபவர்கள். அவர்கள் பணியாற்றும் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்றும், பாலியல் ரீதியிலான வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும், மேல் அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த கடிதத்தில் ஒரு குழுவை நிர்வகிப்பது மற்றும் லீடாக இருந்து செயல்படுத்துவது மாதிரியான பணிகளை பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களும், அது சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களும் மேற்கொள்ளக் கூடாது எனவும் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவரை குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு பக்கத்தில் அமர வைப்பது மற்றும் பிரத்யேக அலுவல் சார்ந்த சந்திப்பு கூட்டத்தை உருவாக்குவது மாதிரியான போக்குகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.