இந்தியா வசமாகும் ரஷ்யாவின் தயாரிப்பு எஸ்-400 ஏவுகணை:கடுப்பாகும் அமெரிக்கா: காரணம் என்ன?

இந்தியா வசமாகும் ரஷ்யாவின் தயாரிப்பு எஸ்-400 ஏவுகணை:கடுப்பாகும் அமெரிக்கா: காரணம் என்ன?
இந்தியா வசமாகும் ரஷ்யாவின் தயாரிப்பு எஸ்-400 ஏவுகணை:கடுப்பாகும் அமெரிக்கா: காரணம் என்ன?

உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலில், சைபீரியா பிராந்தியத்தில் தனது எஸ் - 400 ஏவுகணையை வைத்து ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் கலக்கமடைய செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்கக் கூடாது என்பதிலும் அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் குறியாக இருக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து எஸ் - 400 ஏவுகணைகளை வாங்கினால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கும் அளவுக்கு அமெரிக்கா சென்றிருப்பதே இந்த ஏவுகணை அமைப்பின் வல்லமையை நமக்கு பறைசாற்றி விடுகிறது. ரஷ்யாவின் வாசல்படி வரை நேட்டோ கூட்டமைப்பு வந்துவிட்ட போதிலும், அந்நாட்டுக்கு ஒரு சிறிய அச்சுறுத்தலை கூட அவற்றால் ஏற்படுத்த முடியாததற்கு முக்கிய காரணமாக விளங்குவது எஸ் - 400 ஏவுகணைகள் தான். கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் இருந்து க்ரீமியாவை ஆக்கிரமித்த போதும், நேட்டோ நாடுகள் ரஷ்யாவை நெருங்குவதற்கு அஞ்சியதும் எஸ் - 400 ஏவுகணைகள் தான். இவ்வாறு ரஷ்ய ராணுவத்துக்கு மணிமகுடமாக விளங்கும் எஸ் - 400 ஏவுகணை அமைப்பை குறித்து விரிவாக இங்கு காண்போம்.

அமெரிக்கா - ரஷ்யா இடையேயான பனிப்போர் முடிவடையும் தருணத்தல் தான் (1980-களில்), எஸ் - 400 ரக ஏவுகணை அமைப்பை முதன்முதலில் ரஷ்யா உருவாக்கியது. பின்னர், பல்வேறுகட்ட பரிசோதனைகளுக்கு பின்னர், 2001-ம் ஆண்டு ரஷ்ய ராணுவத்தில் இந்த ஏவுகணை அமைப்பு இணைக்கப்பட்டது. அன்று முதல், படிப்படியாக மெருகேற்றப்பட்டு, இன்று தன்னிகரற்ற ஆயுதமாக எஸ் - 400 ஏவுகணை அமைப்பு வளர்ந்து நிற்கிறது. உலகிலேயே மிக பயங்கரமான 'கொலை ஆயுதம்' என்ற புனைப்பெயரும் இதற்கு உண்டு.

ஒரு நாட்டின் எல்லைக்குள் எதிரி நாட்டு விமானங்கள் வந்தால், அவற்றை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிடமும் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், 8,000 முதல் 12,000 கி.மீ. வரை சென்று தாக்கக் கூடிய சக்திவாய்ந்த அக்னி ரக ஏவுகணைகள் கூட இந்தியாவிடம் இருக்கின்றன. ஆனால், ஒரு நாட்டில் இருக்கும் பகுதியை தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மிகச் சில நாடுகளிடம் மட்டுமே இருக்கின்றன அதுவும், எதிரி நாட்டு ஏவுகணைகளை நூறு சதவீதம் துல்லியத்துடன் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மிகவும் அரிது. அப்படி ஒரு ஏவுகணை அமைப்பு தான் எஸ் - 400. 

வான் பரப்பில் சுமார் 600 கிலோமீட்டருக்கு அப்பால் வரும் எதிரி ஏவுகணைகள், விமானங்களை கூட இந்த ஏவுகணை அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் ரேடாரால் கண்டுபிடித்து விட முடியும். அதுவும் ஒன்று - இரண்டு அல்ல. 160 ஏவுகணைகள் அல்லது விமானங்கள் வரை எஸ் - 400 ரேடார் கண்களில் இருந்து தப்பிக்க முடியாது. அதேபோல, 400 கிலோமீட்டர் தூரத்தில் வரும் 72 இலக்குகளையும் ஒரே நேரத்தில் இந்த ஏவுகணை தாக்கி அழிக்கும். அது ஜெட் விமானம், ஏவுகணை என எதுவாக இருந்தாலும், எஸ் - 400 ஏவுகணையிடம் இருந்து தப்புவது கடினம்.

இந்த ஏவுகணைகள் அதிகபட்சமாக 17,000 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது, அதிகபட்சமாக 400 கி.மீ. தொலைவில் வரும் ஏவுகணைகளை 10 வினாடிகளிலேயே அழித்துவிடும் திறன் படைத்தது எஸ் - 400. தற்போது ரஷ்யா, சீனா, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளிடம் மட்டுமே இந்த ஏவுகணை அமைப்பு இருக்கிறது. பல நாடுகள் இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com