இலங்கையில் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்

இலங்கையில் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்
இலங்கையில் மகிந்த ராஜபக்சவை தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர அக்கட்சியின் பிற அமைச்சர்கள் அனைவரும் தங்களின் ராஜினாமாவை அறிவித்து வருகின்றனர். 

இலங்கையில் சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் வெகுண்டெழுந்த மக்கள் ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக அவசர நிலையை அறிவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்த நிலையில், நேற்றைய தினம் அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச விலகியதாக சில செய்திகள் பரவின. பின் அவை பொய்யென்று இலங்கை அரசு சார்பில் அந்நாட்டு பிரதமர் அலுவலகம் விளக்கம் தெரிவித்தது.

இவற்றை தொடர்ந்து தற்போது இலங்கையின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனுமான நமல் ராஜபக்சவும் தனது ராஜினாமாவை அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் போட்டுள்ள பதிவில், “அனைத்து இலாகாக்களில் இருந்தும் எனது பதவியையும் ராஜினாமா செய்கிறேன். இதுதொடர்பாக அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளரிடம் தெரிவித்துள்ளேன். இந்த ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வரும்பட்சத்தில் பிரதமர், செயலாளர், மக்கள், ஆளும் அரசு என அனைவரும் நாட்டில் பழையபடி ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உதவக்கூடும் என்று நம்புகிறேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்கள், எனது கட்சி மற்றும் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எப்போதும் நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

நமல் ராஜபக்ச மட்டுமன்றி, இலங்கையில் பிற அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை அறிவித்து வருகின்றனர். இதை அநாட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவிக்கும் தகவல்படி அமைச்சர் தினெஷ் குணவர்த்தன, “எப்போது வேண்டுமானாலும் நாங்கள் பதவி விலக காத்திருக்கிறோம். அதனால் எங்கள் ராஜினாமாவை பிரதமரிடம் அளித்துவிட்டோம். அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, ராஜினாமா தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக்கூறியுள்ளதாக தெரிகிறது. அதிபர் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ள நிலையில் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருப்பதால் புதிய அமைச்சரவை விரைவில் அமைக்கப்படும் என இலங்கை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com