இரண்டே நாளில் முடிவு.. Deepseekஐ முறியடித்த அலிபாபா.. ஆட்டம் காட்டும் சீனா!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வளர்ச்சியை மேலும்மேலும் உயர்த்தும் நோக்கில் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது.
தவிர, அது சமீபத்தில் அறிமுகப்படுத்திய புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டன. ஆம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. சீன நிறுவனம் அறிமுகப்படுத்திய டீப்சீக் (Deepseek) ஏஐ மாடல், அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. தவிர சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ செயலிகளைவிட Deepseek அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஓப்பன் ஏஐ நிறுவனம், 100 மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியை உருவாக்கியது. ஆனால், Deepseek நிறுவனமோ அதன் மென்பொருளை வெறும் 6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கியது. இதனால் சாட்ஜிபிடியைத் தாண்டி, ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்தது.
மேலும், அமெரிக்க பங்குச் சந்தையையும் இந்த டீப்சீக் பாதிப்புக்குள்ளாக்கியது. செயற்கை நுண்ணறிவிற்கு தேவையான உயரிய சிப் தொழில்நுட்பத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்த சூழலில்தான் டீப்சீக்சின் எழுச்சி ஏற்பட்டதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டீப்சீக்கையே விஞ்சும் அளவுக்கு புதிய ஏஐ மாதிரியை அறிமுகம் செய்துள்ளது அலிபாபா நிறுவனம். அது, AI மாடலான Qwen2.5 Max இன் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. DeepSeek V3 மாடலைத் தொடர்ந்து, Qwen2.5 Max என்ற ஏஐ மாதிரியை அறிமுகம் செய்துள்ளது.
இது, DeepSeek, GPT-4o மற்றும் Meta's Llama ஆகியவற்றைவிட விஞ்சி நிற்பதாகக் கூறப்படுகிறது. AI சர்வதேச சந்தையின் ஒரு பகுதியாக, இந்த நிறுவனங்கள் போட்டிபோட்டு தமது மாடல்களை அறிமுகப்படுத்துவதால், உலக நாடுகள் அனைத்தும் தங்களது பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதற்காக தொழில்நுட்ப சந்தையை உற்றுக் கவனித்து வருகின்றன.