'பாலியல் தாக்குதலில் தப்பியது எப்படி?' - அழுகுரலுடன் விவரித்த அமெரிக்க பெண் எம்.பி

'பாலியல் தாக்குதலில் தப்பியது எப்படி?' - அழுகுரலுடன் விவரித்த அமெரிக்க பெண் எம்.பி
'பாலியல் தாக்குதலில் தப்பியது எப்படி?' - அழுகுரலுடன் விவரித்த அமெரிக்க பெண் எம்.பி

கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவின் கேபிடல் வளாகத்தில் நிகழ்ந்த கலவரத்தில் பாலியல் தாக்குதலில் இருந்து தப்பியதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அழுகுரலுடன் விவரித்துள்ளார்.

அமெரிக்காவின் பெண் அரசியல்வாதியான அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (Alexandria Ocasio-Cortez) தான் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நிகழ்ந்த கேபிடல் வன்முறை உலகையே உலுக்கியது. இந்நிலையில், தனக்கு அன்று நிகழ்ந்த கசப்பான அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோவில் கண்ணீருடன் பேசிய அவர், "நான் பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பினேன்; நான் இது குறித்து பலரிடம் தெரிவிக்கவில்லை" என்றார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன்... என் முழு வாழ்க்கையிலும் நான் அமைதியாக இருந்ததில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசும்போது, ``இதற்கு யார் பொறுப்பு என்பது தெரியாமல் நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. எல்லோரும் இதைக் கடக்க பழகவேண்டும் என்று ஆறுதல்படுத்த கூறுகிறார்கள். அப்படி கடந்துவிட முடியாது. இந்தத் தருணத்தில் நான் உணர்ச்சிவசப்படுவதற்குக் காரணம் என்ன தெரியுமா?

இது ஒரு பெரிய விஷயமல்ல, என்ன நடந்தது என்பதை நாம் மறந்துவிட வேண்டும் என்று சொல்கின்றனர். இவை துஷ்பிரயோகம் செய்பவர்களின் தந்திரங்கள். என் வாழ்க்கையில் இதை என்னால் மறக்கவே முடியாது. நாம் அதிர்ச்சியால் உறைந்துபோகும்போது, பல்வேறு அச்சங்கள் ஒன்றாக சேர்ந்துவிடுகிறது.

பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அதுபோல் துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலையின்போது இருக்கிறோம் என்பது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், "பாலியல் தாக்குதலில் இருந்து தப்பினேன்" என்றும் தெரிவித்தார்.

``ஒருவன் நான் இருந்த அறைக்கு வெளியே நின்று 'வெளியே வா, வெளியே வா' என்று கத்துகிறான், நிலைமையும் மோசமாக இருக்கிறது. இது நான்கு விநாடியோ, இல்லை ஐந்து விநாடி மட்டுமே மனதில் ஏற்பட்ட அச்சமாக இருந்தாலும் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாத அழுத்தத்தை நான் கேபிடல் கட்டடத்தில் இருந்தபோது அனுபவித்தேன்.

வெளியில் நடப்பதை பார்க்க முடியுமா என்று பார்க்க கதவு இடுக்கு வழியாக பார்த்தேன். ஒரு வெள்ளை மனிதன், கருப்பு நிற தொப்பி அணிந்திருந்தான், 'கதவைத் திற' என்று கத்தினான். நான் பயத்தில் உறைந்து விட்டேன். அந்த சில நிமிடங்களில் என் மனதில் எழுந்த உணர்வுகள் அனைத்தையும் வார்த்தைகளாக சொல்லிவிட முடியாது. இனி என் முழு வாழ்க்கையிலும் நான் ஒருபோதும் அந்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அந்த ஆணின் முகத்தில் இருந்த வெறுப்பும், 'வெளியே வா, வெளியே வா' என்ற கத்தலும் என்னால் மறக்க முடியாது" என கூறியுள்ளார்.

``இந்த சம்பவத்தை கடந்துவிடு என்று சொல்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பவர்களிடம் நீங்கள் இதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறுவதுபோல உள்ளது" என்று கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த வீடியோ, உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com