தரையிறங்கியபோது கடலில் விழுந்தது விமானம்: பயணிகள் மீட்பு
பசிபிக் தீவு நாடான மைக்ரோனேசியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கியபோது, ஓடுபாதையில் இருந்து நழுவிச் சென்று கடலில் விழுந் தது. அதிர்ஷ்டவசமாக விமானம் மிதந்ததால், அதில் இருந்த பயணிகளும், சிப்பந்திகளும் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.
பப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமான, நியூகினி (Niugini) விமான நிறுவனத்தின் போயிங் ரக விமானம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby) என்ற இடத்தில் இருந்து மைக்ரோனேசியாவில் உள்ள சுக் விமான நிலையத்துக்கு வந்தது. ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்றது. ஒரு கட்டத்தில் விமானத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததால், ஓடுபாதையில் இருந்து நழுவி, அருகே இருந்த கடல் பகுதியில் விழுந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் பரபரப்பானார்கள்.
அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் ஏராளமான மீனவர்கள் படகுகளுடன் இருந்ததால், உடனடியாக விமானம் விழுந்த பகுதிக்குச் சென்று, பயணிக ளையும், சிப்பந்திகளையும் மீட்டனர். சுக் விமான நிலையத்தில் குறுகிய தூரத்துக்கு மட்டுமே ஓடுபாதை அமைந்திருந்ததால், இந்த விபத்து நேரிட்டிருப்பதாகப் பயணிகள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
அதே நேரம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 13 ஆண்டுகளுக்கு முன், அந்த விமானத்தை பப்புவா நியூ கினியா நாடு வாங்கியதாகவும், பழமையான அந்த விமானத்தை முறையாக பராமரிக்காததால் இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.