\
air india saudi arabia flights suspended until november 14
Air India ANI

சவூதியில் தீவிரமடையும் ஹவுதி தாக்குதல்.. இந்திய விமான நிறுவனங்கள் அதிரடி முடிவு!

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தீவிர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் சவூதி அரேபியாவிற்கான அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்து காலநீட்டிப்பு செய்துள்ளன.
Published on: 

2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது ஈரான் ஆதரவு ஏமன் ஹவுதிப் படைகளுக்கும், ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே தாக்குதல் தீவிரமாகியுள்ளது. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம், உலகின் வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் வழக்கமாக கடந்து செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள கப்பல்களைக் கண்காணித்து வருகின்றனர். இதனால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

saudi
saudi reuters

இந்த நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தீவிர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் சவூதி அரேபியாவிற்கான அனைத்து விமானச் சேவைகளையும் நவம்பர் 14 வரை ரத்து செய்து காலநீட்டிப்பு செய்துள்ளன. சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களான ரியாத், ஜித்தா மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கான அனைத்து உள்வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் நவம்பர் 14 வரை முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ரியாத் மற்றும் தம்மாமுக்கான விமானச் சேவைகள் நவம்பர் 7 வரையிலும், ஜித்தாவுக்கான சேவைகள் அக்டோபர் 31 வரையிலும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. நவம்பர் 14 வரை பயணம் செய்வதற்காக, அக்டோபர் 30 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளைக் கொண்ட பயணிகள், தங்கள் பயணத்தை ஒருமுறை கட்டணமின்றி மாற்றியமைத்துக் கொள்ளலாம் அல்லது முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டு ரத்து செய்யலாம். மாற்றியமைக்கப்பட்ட பயணங்கள், இடவசதிக்கு உட்பட்டு, நவம்பர் 29-க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகசா ஏர் நிறுவனமும் ஜித்தாவுக்கான விமானச் சேவைகளை நவம்பர் 10 வரையிலும், ரியாத்துக்கான சேவைகளை நவம்பர் 30 வரையிலும் (இன்றுவரை) நிறுத்திவைத்துள்ளது. இண்டிகோ நிறுவனம், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனாவுக்கான சேவைகளை நவம்பர் 14 வரை ரத்து செய்துள்ளது.

Air India flight
Air India flightReuters

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட சவூதி விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட 6 பெரிய தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 383க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.