இம்ரான் கான் திடீர் கைது... காரணம் என்ன? பதற்றத்தில் பாகிஸ்தான்!
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க! IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, அந்நாட்டின் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் உள்ளார். ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் அவ்வப்போது தன் ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டும் வருகிறார்.
இந்த போராட்டங்களை பாகிஸ்தான் அரசு ஒடுக்கி வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இம்ரான் கானுக்கு எதிராக, ஊழல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் இன்று விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வந்த இம்ரான் கானை, பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், அவர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகின.
இம்ரான் கான் கைது குறித்து அவரது கட்சி, “இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டனர். அடையாளம் தெரியாத சிலரால் பெயர் குறிப்பிடாத இடத்திற்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், நிலைமை இயல்பாக இருப்பதாகவும், விதியை மீறுவோர் மீது நடக்கப்படும் எனவும் இஸ்லாமாபாத் காவல் துறை தெரிவித்துள்ளது. அல்-காதர் பல்கலைக்கழக அறக்கட்டளை, பஹ்ரியா என்ற நகரில் உள்ள அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்புடையது. இந்த நிலத்தை தர உதவியதற்காக மாலிக் ரியாஸ் என்பவருக்கு 190 மில்லியன் பவுண்டுகளை இம்ரான் கான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில்தான் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு காணொலி ஒன்றில் பேசிய இம்ரான் கான், ’தாம் பிரசாரம் செய்வதைத் தடுக்கும் வகையிலும், நீதிமன்ற உத்தரவை மீறும்பட்சத்தில், ஆதரவாளர்களுடன் சேர்ந்து அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வகையில் மிகப்பெரிய இயக்கத்தை நடத்துவேன் என்பதாலும் இப்படி கைது செய்ய முற்படுகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இம்ரான் கான் திடீர் கைதால், பாகிஸ்தானில் பதற்றம் உருவாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.