காஸாவைத் தொடர்ந்து லெபனான்.. முக்கியப் பகுதிகளை ஆக்கிரமித்த இஸ்ரேல்.. அறிவித்த நெதன்யாகு!
காஸாவைத் தொடர்ந்து லெபனானின் சில பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் நீண்டநாட்களாகவே மோதல் நிலவி வருகிறது. இதற்கு முன்னர் பல்வேறு முறை இந்த இரண்டு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தியுள்ளன. அதோடு ஹிஸ்புல்லா அமைப்பை காரணம் காட்டி இதற்கு முன்னர் லெபனான் மீது இஸ்ரேல் முழு அளவிலான போரை மேற்கொண்டு அந்த நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
அப்போது ஹிஸ்புல்லா அமைப்பும் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் மீண்டும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே இடையே தீவிர போர் நடைபெற்றது. இஸ்ரேல் ராணுவமும் லெபனானுக்குள் முன்னேறி ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இறுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், லெபனான் - இஸ்ரேல் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், லெபனான் மீதான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்புக்காக காசா, லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தொடர்ந்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், இஸ்ரேலின் பாதுகாப்புக்காக காசா, லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு மண்டலங்களை (Security Zones) உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இஸ்ரேலின் பாதுகாப்பு அச்சுறுத்தல் முடியும் வரை இஸ்ரேலிய படைகள் இந்த பாதுகாப்பு மண்டலங்களில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், லெபனானில் இஸ்ரேல் சுமார் 570 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த படைகளை திரும்பபெறவேண்டும் என லெபனான் அரசு கூறிவரும் நிலையில், அந்த பகுதியில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

