15 வயதில் சிறை... 8 ஆண்டுகளுக்குப் பின் ஊர் திரும்பும் மாரா பக்கீர்... சாதித்துக் காட்டிய ஹமாஸ்..!

சில நாட்கள் குடும்பத்துடன் செலவழித்துவிட்டு, சட்டம் படிக்கவிருக்கிறாராம் மாரா பக்கீர். மாரா பக்கீரைப் போன்ற பெண்கள் தான் பாலஸ்தீன மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முடியும்.
Marah Bakir
Marah BakirAP

ஹமாஸ் 13 பிணைக்கைதிகளை விடுதலை செய்த நிலையில், சிறையிலிருந்த 39 பாலஸ்தீன சிறைவாசிகளை விடுதலை செய்திருக்கிறது இஸ்ரேல் அரசு. அடுத்த நான்கு தினங்களுக்கு, 150 பாலஸ்தீன சிறைக்கைதிகளும், 50 இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் விடுதலை செய்யப்படவிருக்கிறார்கள்.இஸ்ரேல் விடுதலை செய்த சிறைவாசிகளில் பெரும்பான்மையார்னவர்கள் பெண்கள், சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெருசெலத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட 13 நபர்களில் மாரா பக்கீரும் ஒருவர். 2015,2016 காலகட்டங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான வன்முறை இன்னும் அதிகளவில் இருந்தது. 2015ம் ஆண்டு 15 வயதான மாரா பக்கீரைக் கைது செய்து சிறையில் அடைத்தது இஸ்ரேல் அரசு. 15 வயதான மாரா பக்கீர் , ஜெருசெலத்திலிருக்கும் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவர். பள்ளிச் சீருடையில் சென்று அங்கிருந்த இஸ்ரேலிய காவல்துறை அதிகாரிகளை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார் மாரா. மாரா பக்கீரை சம்பவ இடத்திலேயே சுட்டது இஸ்ரேலிய காவல்துறை. இடது கையில் காயங்களுடனேயே கைது செய்யட்டார் மாரா பக்கீர். காவல்துறை அதிகாரியை தாக்க முயன்ற காரணத்திற்காக 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும், மாரா பக்கீருக்கு விதிக்கப்பட்டது. மாரா கைது செய்யப்பட்டதும், இஸ்ரேலிய கேக் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த மாராவின் தந்தையின் வேலையும் பறிபோனது.

கிழக்கு ஜெருசெலத்தில் பாலஸ்தீனர்கள் அதிகளவில் வசிக்கும் பெயிட் ஹனினா பகுதியில் தான் மாரா பக்கீரின் குடும்பம் வசித்து வருகிறது. 8 ஆண்டுகளாக தொடப்படாத மாராவின் அறையை தற்போது சுத்தம் செய்துகொண்டிருக்கிறார் மாறாவின் தாயார். வெஸ்ட் பேங்கில் இன்னமும் குடும்ப சுமை காரணமாக அதிக நேரம் வேலை செய்துகொண்டிருக்கிறார் மாராவின் தந்தை. எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்துக்கு, மாராவின் கைது பெரும் இடியாய் இறங்கியது.

2011ம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர் கிலாட் ஷாலித்துக்குப் பதிலாக 1000 பாலஸ்தீன சிறைவாசிகளை விடுவித்தது இஸ்ரேல் அரசு. இந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் 240 பிணைக்கைதிகளை சிறைப்பிடித்த போதும், பாலஸ்தீன சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை குரலாக ஒலித்தது. காஸாவில் இந்த முறை யுத்தம் ஆரம்பித்ததும், மாரா பக்கீர் உட்பட பலரை தனிமைச் சிறைக்கு மாற்றியது இஸ்ரேல் அரசு. இந்த இடைப்பட்ட காலங்களில் மாரா பக்கீர் ஓர் அரசியல் அடையாளமாக சிறைக்குள்ளேயே உருவாகியிருந்தார். பாலஸ்தீன சிறைகளில் வாடும் பெண்களுக்கான பிரதிநிதி அவர். மாராவின் விடுதலையை நாங்கள் பெரிதாகக் கொண்டாடப் போவதில்லை. காஸாவில் இன்னும் போர் நடந்துகொண்டிருக்கிறது. என்கிறார் மாராவின் தாயார். காஸாவில் நடக்கும் போர் இஸ்ரேலிய சிறைகளை வெறுமையாக்கட்டும்.

கற்கள் வீசுவது, வன்முறைக்கு காரணமாக இருப்பது போன்ற குற்றங்களின் அடிப்படையில் பலரைக் கைது செய்திருக்கிறது இஸ்ரேல் அரசு. கைது செய்யப்பட்டவர்களில் பலர் இன்னும் நீதிமன்ற விசாரணைக்குக்கூட ஆஜர்படுத்தப்படவில்லை. முறையான விசாரணை கூட இல்லாமல், சிறையில் பல ஆண்டுகள் அடைப்பது சர்வதேச குற்றம். ஆனால், அதையெல்லாம் எந்த அரசும் பின்பற்றுவதில்லை.

சில நாட்கள் குடும்பத்துடன் செலவழித்துவிட்டு, சட்டம் படிக்கவிருக்கிறாராம் மாரா பக்கீர். மாரா பக்கீரைப் போன்ற பெண்கள் தான் பாலஸ்தீன மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தர முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com