ஆப்கானிஸ்தானில் ஆண் துணையின்றி பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடாது - தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் நீண்ட தூர சாலைப் பயணங்கள் செல்ல முடியாது என்று தலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் துன்மார்க்கத்தைத் தடுப்பதற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களிடமிருந்து கடும் கண்டனங்களை பெற்றுள்ளன. மேலும், தலையில் முக்காடு அணியாத பெண்களை சவாரி அழைத்து செல்ல மறுக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து, பொதுத் துறைப் பணிகளில் உள்ள பல பெண்கள் வேலைக்குத் திரும்புவதைத் தலிபான்கள் தடுத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"45 மைல்களுக்கு (72 கிலோமீட்டர்) மேல் பயணம் செய்யும் பெண்கள் குடும்பத்தின் நெருங்கிய ஆண் உறவினர் இல்லாமல் செல்லக்கூடாது" என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் சதேக் அகிஃப் முஹாஜிர் கூறினார்.
தலிபான் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்திருக்கும் பெண்கள் உரிமைகளுக்கான குழுவின் இணை இயக்குனர் ஹீதர் பார், "இந்த புதிய உத்தரவு பெண்களை கைதிகளாக்கும் திசையில் மேலும் நகர்கிறது. இது அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், வேறொரு நகரத்திற்குச் செல்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும் அல்லது அவர்கள் வீட்டில் வன்முறையை எதிர்கொண்டால் தப்பிச் செல்வதற்குமான வாய்ப்புகளை முடக்குகிறது" என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, மக்கள் தங்கள் வாகனங்களில் இசை ஒலிப்பதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டது. சில வாரங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களிடம் பெண் நடிகர்கள் இடம்பெறும் நாடகங்கள் மற்றும் சோப் விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டது. பெண் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சிகளை வழங்கும்போது முக்காடு அணியுமாறும் அது அழைப்பு விடுத்துள்ளது.

