\
afghanistan taliban drone attacks pakistan safed fishing nets from army posts
Model imagegoogle gemeni

ஆட்டம் காட்டும் ஆப்கான்.. ட்ரோன் வாங்க காசு இல்ல.. மீன்பிடி வலையை நாடும் பாகிஸ்தான்!

மீன்பிடி வலைகள் ஒரு முழுமையான தீர்வு அல்ல என்றும், அவை ஒரு தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடியவை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
Published on: 

பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை ஆப்கான் தாக்கிவரும் நிலையில், அவற்றிலிருந்து பாதுகாக்க பாகிஸ்தான் ராணுவம் புதிய உத்தியைக் கையாண்டிருப்பது உலகில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் ராணுவ மற்றும் காவல் சோதனைச் சாவடிகளை ட்ரோன் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் மீன்வலைகள் பயன்படுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இதனால் இருநாட்டு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், தாலிபன் மீண்டும் தலைமைக்கு வந்ததற்குப் பிறகு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், ‘பாகிஸ்தானிய தலிபான்கள்’ என்று அழைக்கப்படும் 'தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' (TTP) அமைப்பினர் வணிகரீதியான ட்ரோன்களில் வெடிபொருட்களைப் பொருத்தி ராணுவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ட்ரோன்களை வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் ஏவுகணைகளையோ அல்லது ரேடார் அமைப்புகளையோ கையாளவில்லை. மாறாக, மீனவர்கள் பயன்படுத்தும் ஒரு சாதாரண மீன்பிடி வலையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

reuters

சோதனைச் சாவடியின் கூரைகளுக்கும் சுற்றுச் சுவர்களுக்கும் இடையில், தலைக்கு மேலே இந்த வலைகளை அவர்கள் பொருத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள ஹங்கு மாவட்டத்தில், ஏப்ரல் மாதம் நடந்த இதுபோன்ற ஒரு தாக்குதலுக்குப் பிறகுதான், பாகிஸ்தான் இராணுவம் இதுபோன்ற வலையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பண நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவுவதற்குப் பதிலாக, ஒரு மாற்று ஏற்பாடாக மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி வருகிறது. ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளுக்கு 5,000 டாலர் முதல் 5,000,000 டாலர் வரை செலவாகலாம் என்கிற நிலையில், 1,400 டாலருக்கு (ரூ. 1.30 லட்சம்) சோதனைச்சாவடிகளை மூட இதுபோன்ற வலைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

Model image
Model imagegoogle gemeni

கடந்த சில மாதங்களில் மட்டும், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கோஹாட், கரக், பன்னு, லக்கி மர்வத் மற்றும் டேரா இஸ்மாயில் கான் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களில் இந்த மீன்பிடி வலைகள் போர்த்தப்பட்டுள்ளன. சோதனைச்சாவடியின் மீது ஒரு ட்ரோன் வந்து விழுந்தால், அது வலையில் சிக்கி செயலிழக்கச் செய்யப்படவோ அல்லது நிறுத்தப்படவோ வாய்ப்புள்ளது; அதனால் ஏற்படும் சேதம் மிகவும் குறைவாகவே இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், மீன்பிடி வலைகள் ஒரு முழுமையான தீர்வு அல்ல என்றும், அவை ஒரு தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடியவை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com